Politics
“உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும்” – முதல்வருக்கு கோரிக்கை வைத்தது யார் தெரியுமா…???
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.ராஜன்.
எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தடாலடிக்குச் சொந்தக்காரர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ரஜினியோடு பயணித்தார்.
ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்ததோடு, ரஜினியால் தான் வாழ்க்கையே போனது எனவும் சீறினார்.
மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தவருக்கு, விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இப்போது, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும்’ என, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இவர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், “நீங்கள், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த பொறுப்புக்கு வந்திருந்திருக்கிறீர்கள்.
தன் இல்லத்திலேயே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்தே வளர்ந்ததால், இருவரது ஆற்றலையும் இந்த இளம் வயதிலேயே ஆழமாக உள்வாங்கி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
எனவே, தமிழக முதல்வராகிய நீங்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்.
இளம் தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து, சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
அதற்கு எல்லா மக்களும் விரும்பும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது பொருத்தமானதாக இருக்கும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்
