Tamil News
“தக்காளி விலை இனி படிப்படியாக குறையும்” – விக்கிரமராஜா நம்பிக்கை..!!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கிய காலத்தில் சில்லறை விற்பனைக் கடைகளில் 20 முதல் 25 ரூபாய்க்கும் சிறு சந்தைகளில் 10 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகி வந்தது.
ஆனால், மழைக் காலம் துவங்கியதும் தக்காளியின் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கி, தற்போது கோயம்பேடு மொத்த விற்பனைக் கடைகளிலேயே கிலோ 100 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளது.
இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது.
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தக்காளி விலை உயர்வு சமூக வலைத்தளங்களில் மீம்கள் அதிரடியாக வெளிவந்தது.
சிலர் தக்காளி இல்லாமல் உணவு சமைப்பது எப்படி என கூகுளில் தேட துவங்கினர்.
இந்நிலையில், தக்காளி விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா,
“மழைக்காலங்களில் தக்காளியின் விலை உயர்வது இயல்பானது.
ஆனால் தற்போது தக்காளியின் விலை குறைந்துள்ளது.
காரணம் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இல்லாமல் சத்தீஸ்கரில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு தக்காளி வந்தடைகிறது.
வாகன வாடகை உயர்வு காரணமாக தக்காளி விலை அதிகரித்ததாக கூறிய அவர், இன்று முதல் தக்காளியின் விலை படிப்படியாக குறையும்” என தெரிவித்தார்.
