Cinema
நடிகர் சூர்யா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!
நடிகர் சூர்யா நடிப்பில் அவருடைய 2டி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதியன்று வெளியானது.
ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று வன்னியர்களை அவமதித்து விட்டதாக இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், குறவர் சமூகத்தை வன்கொடுமை செய்து விட்டார்’ என, நடிகர் சூர்யா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முருகேசன்.
குறவன் மக்கள் நல சங்கத்தின் தலைவரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, ‘ஜெய்பீம்’ என்ற படத்தில், குறவர் சமூகத்தை பற்றி இழிவுப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குறவர் சமூக மக்களை, ‘ஜெய்பீம்’ படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி மிகவும் வேதனையடைய செய்துள்ளது.
அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். எங்கள் சமூகத்தின் மீது வன்கொடுமை செய்துள்ள நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது
