Politics
நெல்லை பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – பாமக
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோர் படுகாயங்களுடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன்.
மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.
