Sports News
பிரேசிலில் நடைபெறும் கால்பந்து போட்டியில் விளையாட தேர்வாகியுள்ள நாமக்கல் விசைத்தறி தொழிலாளியின் மகள்; குவியும் பாராட்டுக்கள்..!!
பிரேசிலில் நடைபெறவுள்ள 4 நாடுகளைச் சோ்ந்த மகளிா் அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 போ் கொண்ட இந்த அணியில் தமிழகத்தைச் சோ்ந்த இந்துமதி, சௌமியா, காா்த்திகா, மாரியம்மாள் ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தப் போட்டிகளில் இந்தியா, பிரேசில், சிலி,வெனிசுலா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று பிரேசில் கிளம்பியது.
இந்திய மகளிர் கால்பந்து அணி ஃபிபா உலக தரவரிசையில் 57ஆவது இடத்தில் உள்ளது.
பிரேசில் அணி ஃபிபா தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ளது.
அதேபோல், சிலி அணி உலக தரவரிசையில் 37ஆவது இடத்திலும், வெனிசுலா அணி 56ஆவது இடத்தில் உள்ளன.
ஆகவே இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள மூன்று அணிகளும் இந்திய அணியைவிட தரவரிசையில் முன்னிலையில் உள்ளன.
இதன் காரணமாக இந்தத் தொடர் இந்திய அணி மிகவும் சவால் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அதேசமயம் இந்திய வீராங்கனைகளுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகவும் அமையும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை வரும் 25ஆம் தேதி மோதுகிறது.
அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி சிலி அணியை எதிர்த்து விளையாடுகிறது.
கடைசி போட்டியில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெனிசுலா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்த தொடரில் விளையாடவுள்ள மாரியம்மாள் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர். இவரது தந்தை பாலமுருகன். விசைத்தறி தொழிலாளி.
இளம் வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் மீது ஆவல் இருந்துள்ளது.
அதன் விளைவாக நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார் மாரியம்மாள்.
துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இவர், மாநில அளவிலான அணியில் இடம்பிடித்தார்.
இதன்மூலம் தமிழ்நாடு அணியில் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிகள் பெற காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமதி கதிரேசன் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
சேலத்தைச் சேர்ந்தவர் கோல் கீப்பர் சவுமியா நாராயணசாமி.
