Connect with us

    வெவ்வேறு பெயர்களில் 6 பெண்களை திருமணம் செய்து விட்டு, 7-வது திருமணத்திற்கு தயாரான கல்யாண மன்னன்; வெளியான ஷாக் தகவல்கள்…!!

    Tamil News

    வெவ்வேறு பெயர்களில் 6 பெண்களை திருமணம் செய்து விட்டு, 7-வது திருமணத்திற்கு தயாரான கல்யாண மன்னன்; வெளியான ஷாக் தகவல்கள்…!!

    நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரை கண்ணனிடம் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் ராஜ் என்பவர் புகார் அளித்தார்.

    அதில், தன் மகள் விஜிலாராணியை திருமணம் செய்த திசையன்விளை சுவிஷேசபுரத்தை சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவர் பணம் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

    நெல்லை மாநகர மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.

    வின்சென்ட் பாஸ்கரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் இருக்குமிடம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

    திருமணத்தின்போது, வின்சென்ட் பாஸ்கரின் தாய் எனத் தெரிவித்த பிளாரன்ஸ் சித்தியான தாமரைச்செல்வி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில், தாய், சித்தியாக இருவரும் போலியாக நடித்தது தெரியவந்தது.

    இந்த திருமணத்தின் புரோக்கராக செயல்பட்ட இன்பராஜ் என்பவர் தலைமறைவானார்.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கர் அப்பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீஸ் பிடியில் வின்சென்ட் பாஸ்கர் சிக்கினார்.

    அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் வின்சென்ட் ராஜின் உண்மையான பெயர் வின்சென்ட் பாஸ்கர் என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் வெவ்வேறு பெயர்களை கூறி இதுவரை 6 பெண்களை திருமணம் செய்ததும், அதன்மூலம் கிடைத்த வரதட்சணையை வைத்து கொண்டு சொகுசாக வாழ்ந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் திசையன் விளையை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலமாக விஜிலாராணியை 6-வதாக திருமணம் செய்ததும், இதற்காக சித்தியாகவும், தாயாகவும் 2 பெண்களை நடிக்க வைத்ததும் தெரிய வந்தது.

    விஜிலாராணியின் தந்தை கணேசன், தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற ஆசையில் பாளையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

    இதனை அறிந்த வின்சென்ட், திசையன்விளை சுவிஷேச புரம் வடக்கு தெருவை சேர்ந்த இன்பராஜ் என்ற திருமண புரோக்கரிடம் பேசி உள்ளார்.

    அப்போது, விஜிலா ராணியை தனக்கு திருமணம் செய்து வைத்தால், அதில் கிடைக்கும் வரதட்சணை தொகையை 2 பேரும் சமமாக பங்கிட்டு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கணேசனை தொடர்பு கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

    இந்த திருமணத்திற்காக சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த பிளாரன்ஸ் (58) என்ற பெண்ணை தனக்கு தாயாகவும், திசையன்விளை ஜேம்ஸ் தெற்கு தெருவை சேர்ந்த தாமரை செல்வி(56) என்ற பெண்ணை தனக்கு சித்தியாகவும் நடிக்க வைத்துள்ளார்.

    வின்சென்ட் பாஸ்கர் சாயர்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை முதலாவதாக திருமணம் செய்துள்ளார்.

    பின்னர் பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தை சேர்ந்த பெண்ணை 2-வதாகவும், களக்காடு டோனாவூரில் 3-வது திருமணமும் செய்துள்ளார்.

    களக்காடு கீழகாடு வெட்டியை சேர்ந்த பெண்ணை 4-வதாகவும், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை 5-வது திருமணம் செய்த வின்சென்ட் ராஜ், கடைசியாக பாளையை சேர்ந்த விஜிலா ராணியை திருமணம் முடித்துள்ளார்.

    7-வதாக ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    வின்சென்ட் ராஜ், இதுவரை திருமணம் முடித்த பெண்கள் அனைவருமே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    அந்தந்த பகுதியில் உள்ள திருமண புரோக்கர்களை பணம் தருவதாக ஆசை காட்டி இதுவரை கைவரிசை காட்டி வந்துள்ளார்.

    ஒவ்வொரு பெண்களுடனும் சுமார் 3 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தும் வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்ந்துள்ளார்.

    இதனால் அவரை நம்பிய பெண்களிடம் தனக்கு வியாபாரம் செய்வதற்கு பணம் வேண்டும் என்று கூறி நகை-பணத்தை அபகரித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் இருந்து எந்த புகார்களும் வரவில்லை என்றாலும், அவர்களிடம் இருந்தும் இதுவரை சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை வின்சென்ட் ராஜ் அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே விஜிலா ராணியை திருமணம் செய்ய உதவி செய்த புரோக்கர் இன்பராஜ், தலைமறைவாகிவிட்டார்.

    அவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    வின்சென்ட் பாஸ்கர் மேலும் பல பெண்களையும் தனது வலையில் வீழ்த்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!