Tamil News
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஒரே நேரத்தில் காவல் துறையில் தேர்வு; குவியும் பாராட்டுக்கள்..!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஒரே நேரத்தில் காவல் துறையில் தேர்வாகியுள்ளதால் அக்குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்- ஷகிலா தம்பதியர்.
இவர்களுக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
மூத்த மகள் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம் வயதிலிருந்தே சகோதரிகள் மூன்று பேரும் போலீஸில் சேர வேண்டுமென உறுதியாக இருந்து வந்தனர்.
அதற்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் சகோதரிகள் மூவரும் கலந்து கொண்டு தேர்வில் மூவரும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார்.
வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.
தனது மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியதாவது:-
”எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன்.
நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை.
இதனால் இருக்கின்ற 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது 3 மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.
மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர்.
மற்றவர்கள் திருமணமாகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் 3 பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர்.
எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் பெருமையாக இருக்கிறது.
மகள்கள் 3 பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள். மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர்.
2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். 3 மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள்.
எனது விவசாய நிலத்திலே 3 பேரும் ஓட்டப்பயிற்சி எடுத்தார்கள். அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எனது மகள்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு மருமகன் ராஜூவ்காந்தி தான் காரணம் என்றார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
சகோதரிகள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி முடித்துள்ளதை அந்த கிராம மக்கள் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
