Viral News
கல்வி கற்க வயது தடையில்லை; தனது 50-வது வயதில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தூய்மைப் பணியாளர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது 50 வயதில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி தேர்ச்சியடைந்திருக்கிறார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்தவர் குஞ்சிகோர்வே மச்சான்னா ராமப்பா.
50 வயதாகும் ராமப்பா கடந்த 20 வருடங்களாக பிரஹன்மும்பை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிரா மாநில 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வில் முதன் முதலாக கலந்துகொண்ட இவர் 57 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்கிறார்.
தாராவியில் உள்ள யுனிவர்சல் நைட் ஸ்கூலில் 8 ஆம் வகுப்பில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் சேர்ந்த ராமப்பா, தினந்தோறும் மாலை நேரங்களில் கல்வி பயின்று வந்திருக்கிறார்.
காலையில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் இவர், இரவு 7 மணி முதல் 8.30 மணிவரையில் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை படித்திருக்கிறார்.
அதன் பலனாக 8 வது தேர்ச்சி பெற்ற ராமப்பா, அடுத்த முயற்சியாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என நினைத்திருக்கிறார்.
இவரது கனவிற்கு குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவு அளிக்கவே, உத்வேகத்துடன் படித்துவந்த ராமப்பா தற்போது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்று அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
நடந்து முடிந்த தேர்வில் மராத்தியில் 54, இந்தியில் 57ஆங்கிலத்தில் 54 கணிதத்தில் 52, அறிவியலில் 53, சமூக அறிவியலில் 59 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் ராமப்பா.
சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னால் பள்ளி கல்வியை தொடர முடியாமல் போனதாக சோகத்துடன் குறிப்பிடும் ராமப்பா,”நான் படிக்க போகிறேன் என்று எனது குடும்பத்தினருடன் சொன்னபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், நான் படிப்பில் தொடர்ந்து ஈடுபட உத்வேகம் அளித்து என்னை தேர்ச்சி பெறவும் வைத்திருக்கிறார்கள்.
சிறுவயதில் படிக்க முடியாமல் போனதை எண்ணி பல நாள் கவலைப்பட்டிருக்கிறேன்.
கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை புரிந்துகொண்ட பின்னர் கனவுகளை துரத்த துவங்கினேன்” என்றார்.
