Viral News
இறந்து போன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டி முன் சிரித்த முகத்துடன் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படம்..!
கேரளாவில் ஒரு குடும்பத்தில், இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகத்துடன் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துகொண்டுள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் என அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அவர்களில் பலர், மூதாட்டியின் உயிரிழந்த தகவல் கேட்டு கேரளா வந்துள்ளனர்.
மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்துடன் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த புகைப்படம் சமூக இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
மூதாட்டியின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ கூறும்போது, ‘மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை.
நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.
பின்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம்.
அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம்’ என்றார்.
