Tamil News
எலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் வாண்டடா வந்து மாட்டிய அரிய வகை கோதுமை நிற நாகப்பாம்பு..!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே எலிகளுக்கு வைத்த கூண்டில் சிக்கிய அரிய வகை நாக பாம்பு வனத்துறையினரால் மீட்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பல்லக்காட்டுப்புதூர் வட்டமலை தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி.
குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்துவருகின்றார்.
இந்த தோட்டத்தில் அதிகஅளவில் எலி, பெருச்சாளி போன்றவைகள் கோழிகளின் முட்டைகளை உடைத்து விடுகின்றன.
இதனால் அவைகளை பிடிக்க தினமும் கூண்டு வைப்பது வழக்கம்.
அவ்வாறு நேற்று முன்தினம் இரவு சிறிய கரித் துண்டுடன் கூண்டு வைக்கப்பட்டது.
பின்னர் நேற்று காலை கூண்டில் எலி அல்லது பெருச்சாளி உள்ளதா என்று பார்த்துள்ளார். அதில் அறிய வகை பாம்பு இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பொன்னுசாமி அருகில் உள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தினர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிய கூண்டில் சிக்கிய இந்த அரியவகை நாக பாம்பை ஊர் பொதுமக்கள் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் தனபால் மற்றும் பாபு ஆகியோர் கூண்டில் சிக்கிய இந்த பாம்பு அரிய வகை ‘கோதுமை நாக பாம்பு’ வகையை சேர்ந்தது என்றும், அதிக விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த பாம்பு சுமார் 2 வயதிற்கு மேல் இருக்கும் என்றும், 5 அடி நீளம் உள்ளது என தெரிவித்தனர்.
பின்னர் பாம்பு சிக்கிய கூண்டோடு சாக்கில் போட்டு கட்டி எடுத்து சென்ற வனத்துறையினர் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் காப்பு காட்டில் பாம்பை பத்திரமாக விட்டனர்.
