Viral News
லிப்டின் கதவுகளுக்கு இடையில் சிக்கி கொண்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த லிப்டில் கதவுகளுக்கிடையில் சிக்கி கொண்ட இளம் ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாடில் உள்ள சிஞ்சோலி பண்டரில் செயல்பட்டு வரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் ஆசிரியராக ஜெனல் பெர்னாண்டஸ் (26) பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக ஆறாவது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார்.
லிப்டில் அவர் முழுமையாக செல்வதற்குமுன் அதன் கதவுகள் மூடத்துவங்கியுள்ளது.
இதனால் லிப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கி அலறத் துவங்கினார் ஜெனல் பெர்னாண்டஸ்.
லிப்ட் கீழே நகரத் துவங்கியபோது பள்ளி ஊழியர்கள் அனைவரும் ஓடி வந்து அவருக்கு உதவ முயன்றுள்ளனர்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர் வெளியே இழுக்கப்பட்டார்.
பலத்த காயமுற்ற அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியை ஜெனல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தார்.
இது குறித்து அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “லிஃப்ட் கம்பெனி ஊழியர்கள் அடிக்கடி வந்து சோதனை செய்து பராமரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இதற்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததே கிடையாது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.
போலீசார் இது குறித்து விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெனலுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
