Viral News
“இனி குளிக்க மாட்டேன்” – 22 ஆண்டுகளாக குளிக்காமல் தனது சபதத்தை பின்பற்றி வரும் முதியவர்..!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வரும் தகவலும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மனிதனின் அன்றாட கடமைகளில், மிக முக்கியமான ஒன்று தினம் தோறும் குளிப்பது.
அப்படி குளிப்பதன் மூலம் நம் உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், நம் உடலில் ஒருவித புத்துணர்ச்சியும் உண்டாகும்.
ஒன்றிரண்டு நாட்கள் குளிக்காமல் இருந்தாலே, ஒரு வித துர்நாற்றம் உடலில் உருவாகும்.
அப்படி இருக்கும் நிலையில் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் குளிக்காமல் இருந்து வருகின்ற தகவல் வெளியாகி, பலர் மத்தியில் கேள்விகளை உருவாக்கியுள்ளது.
பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைகுந்த்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மதேவ் ராம்.
தொண்ணூறு காலகட்டங்களில் நிலத்தகராறு, விலங்குகள் கொல்லப்படுவது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என சமுதாயத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தது, தர்மதேவை கலங்க வைத்துள்ளது.
தொடர்ந்து, ஒரு குருவிடம் சென்று, அவருடன் ஆறு மாதங்கள் இருந்து ஆசி பெற்று, பின்னர் குளிக்க வேண்டாம் என தர்மதேவ் சபதம் எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
22 ஆண்டுகளுக்கு மேல் அவர் குளிக்காமல் இருந்து வரும் நிலையில், நடுவே அவர் குளிப்பதற்கான வாய்ப்புகளும் உருவானது.
கடந்த 2003ஆம் ஆண்டு, அவரது மனைவி இறந்த போதும், தான் எடுத்த சபதத்திற்காக அவர் குளிக்கவில்லை.
அதன் பின்னர், அவரது இரண்டு மகன்கள் இறந்த போதும் கூட, உடலில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க, குளிக்காமல் இருந்து வந்ததால், வேலையையும் இழந்துள்ளார் தர்மதேவ்.
கொல்கத்தாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தர்மதேவ், குளிக்காமல் இருந்ததால் அவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
ஆனாலும், தொடர்ந்து குளிக்காமல் தனது சபதத்தை பின்பற்றி வருகிறார்.
தர்மதேவ் சபதத்தை போல மற்றொரு ஆச்சரியம், அவருக்கு குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தருவது தான்.
அதே போல, இத்தனை ஆண்டுகள் குளிக்காமல் இருந்து வந்தாலும், அவருக்கு எந்தவித நோய்களோ அல்லது சர்ம வியாதிகளோ இல்லை என்பதும் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
