Tamil News
பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை விளக்குமாறால் விளாசிய பெண்; குவியும் பாராட்டுக்கள்…!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியாக ஆட்டோவில் சென்ற போது ஆபாசமாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் விளக்குமாற்றால் விளாசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கண்ணகி.
இவர் நாள்தோறும் தான் பணிபுரியும் அங்கன்வாடி மையத்திற்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
வழக்கம் போல கண்ணகி இன்று அங்கன்வாடி மையத்திற்கு செல்ல, அவர் வசித்து வரும் பகுதியில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த கண்ணன் என்பவரது ஆட்டோவில் ஏறி அங்கன்வாடி மையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்பொழுது, தனிமையான சூழலை பயன்படுத்தி ஆட்டோ டிரைவரான கண்ணன் கண்ணகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
உடனே கண்ணகி ஆட்டோ டிரைவரின் அத்துமீறலை அவரது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில், கண்ணகியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று ஆட்டோ டிரைவரான கண்ணனிடம் நியாயம் கேட்டுள்ளார்கள்.
அப்பொழுது கண்ணன் அவர்களிடம் ஆபாசமாக பேசவே, கண்ணகியின் கணவருக்கும், கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆனது.
உடனே அங்கு நின்று கொண்டிருந்த கண்ணகி தான் வைத்திருந்த துடைப்பத்தால், ஆட்டோ டிரைவர் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும், அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம், இதேபோல் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு ஒருபோதும் யாரும் சப்போர்ட் பண்ணாதீர்கள் எனக்கூறியபடி, கண்ணனை துடைப்பத்தால் மேலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி கொடுத்த புகாரின் அடிப்படையில், செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரான கண்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய பெண்ணின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
