World News
அகதியாய் படகில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக குடியுரிமை வழங்கிய நாடு…!
வாழ வழி தேடி அகதிகளாய் படகில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையை வழங்குகிறோம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேமரூனில் இருந்து அகதிகளாய் ஐரோப்பாவுக்கு வந்தபோது படகில் பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது.
இந்த குழந்தையின் தாயார் கர்ப்பிணியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் கேமரூன் நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் வந்துள்ளார்.
அப்போது படகிலேயே இவருக்கு இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் ஸ்பெயின் நாட்டில் அடைக்கலம் புகுந்த நிலையில், நாடற்ற அந்த குழந்தைக்கான குடியுரிமை பெற குழந்தையின் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த குழந்தையின் அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை அதன் குடியுரிமையை காரணம் காட்டி பாதித்து விடக் கூடாது,
சமத்துவத்தை கருத்தில் கொண்டு படகில் பிறந்த இந்த குழந்தைக்கு முதல் முறையாக ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையை வழங்குகிறோம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற சம்பந்தப்பட்ட நபர் அந்நாட்டில் பிறந்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும் ஸ்பெயினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அல்லது யாரேனும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபரை மணம் முடித்திருக்க வேண்டும்.
ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளைத் தாண்டி அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
