Sports News
சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத்; குவியும் பாராட்டுக்கள்..!!
சென்னையைச் சேர்ந்த 14 வயது பரத் சுப்ரமணியம் சர்வதேச சதுரங்க போட்டி தொடரில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார்.
சென்னையச் சேர்ந்த பரத் சுப்பிரமணியம் தனது 5 வயது முதலே தந்தை ஹரிசங்கரிடம் சதுரங்கம் விளையாட கற்று வந்தார்.
அதன் பின்னர், கிராண்ட்மாஸ்டர் ராமச்சந்திரன் ரமேஷிடம் சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பரத் சுப்பிரமணியம், 2019-ம் ஆண்டில் நடந்த கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் கோலோஷ்சபோவின் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
இந்த அமர்வுகள் அவரது ஆட்ட நுணுக்கங்களை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தது. மேலும், அவரது நெறிமுறைகளை வேகமாக அடைய உதவியது.
தனது சிறப்பான காய் நகர்த்தும் திறமையால் பரத், 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடரில் 11வது இடத்தையும், கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த தொடரில் 4 ஆவது இடத்தையும் பெற்றார்.
இந்நிலையில், இத்தாலி நகரில் உள்ள கட்டோலிகா நகரில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் 6.5 புள்ளிகள் பெற்று பரத் சுப்பிரமணியம் 7-வது இடம் பெற்றார்.
ஆனால், கிராண்ட் மாஸ்டருக்குத் தேவையான 2500 எலோ ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதையடுத்து, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
இந்த செஸ் போட்டியில் இந்திய வீரர் எம்ஆர் லலித் பாபு 7 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
14 வயதான பரத், தன்னுடைய 11 வயது 8 மாதங்களிலேயே சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத் சுப்பிரமணியமுக்கு 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக வந்துள்ள பரத் சுப்பிரமணியமுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த சிறுவன் பரத்துக்கு, சிறந்த உள்ளுணர்வு இருக்கிறது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் தங்களின் இணையதளத்தில் பதிவிட்ட கருத்தில், “ இத்தாலியில் நடந்த வெர்கானி ஓபனில் 2500 ரேட்டிங் புள்ளிகளைக் கடந்து, இறுதி ஜிஎம் விதிகளைக் கடந்து, 14 வயது பரத் சுப்பிரமணியம் நாட்டின் 73-வது கிராண்ட் மாஸ்டராக உருவாகியுள்ளார்.
அவருக்கு அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது
