Tamil News
பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்; வைரல் வீடியோவால் பரபரப்பு..!
சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவன் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் மாணவன், மாணவியிடம் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையிலிருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் தங்களது பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிலையத்தில் அமர்ந்த படி தாலி கட்டிக் கொண்டுள்ளனர்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில், சிதம்பரம் நகர பகுதி போலீசார் நடத்திய விசாரணையில் தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும், மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
தற்போது மாணவன், மாணவி இருவரையும் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
