Tamil News
திருமண மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்; அதிர்ச்சியில் கதறி அழுத பெற்றோர்..!!
கர்நாடக மாநிலத்தில் திருமண மேடையில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்துக்கு உட்பட்டது சீனிவாசபுரம்.
இப்பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற 26 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் நடந்திருக்கிறது.
இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சைத்ராவும், மணமகனும் மேடையில் மிகவும் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மணப்பெண் சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
மூச்சுப் பேச்சற்று கிடந்த சைத்ராவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர் கதறி அழுதனர்.
பின்னர், சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:
சைத்ராவின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நாள். ஆனால் விதி வேறு திட்டங்களை தீட்டிவிட்டது.
இதயத்தை நொருக்கும் சோகத்திற்கு இடையே, உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்துள்ளனர். இந்த செயல் பல உயிர்களை காப்பாற்றும் என கூறினார்.
திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
