Tamil News
தனது நண்பனை காதல் திருமணம் செய்த தங்கை; கடும் ஆத்திரத்தில் அண்ணன் செய்த பகீர் செயல்..!
சூளகிரியை அடுத்த பி.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ் மற்றும் 26 வயதான முருகேசன் ஆகியோர் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் அடிக்கடி முருகேசன் வீட்டுக்குச் சென்று வந்த சந்தோஷ், அவரது தங்கை மீனாவுடன் காதல் கொண்டுள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் முருகேசனுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் தனது நண்பர் சந்தோஷ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முருகேசனின் எதிர்ப்பையும் மீறி சந்தோஷ் – மீனா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அண்மையில் முருகேசன் வீட்டார் நிலத்தை விற்க முயன்றபோது மீனாவும் தனது சொத்தை பிரித்துத் தரக் கேட்டதாகத் தெரிகிறது.
தங்கை மீனா காதல் திருமணம் செய்ததில் இருந்தே மிகுந்த கோபத்தில் இருந்து வந்த முருகேசன், சொத்திலும் பங்கு கேட்டதால் மேலும் ஆத்திரமடைந்தார்.
இதற்கெல்லாம் காரணம் தனது நண்பன் சந்தோஷ்தான் எனக்கருதிய முருகேசன், அவர் வீட்டுக்குச் சென்று சண்டையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சந்தோஷைக் கொல்ல 12ம் வகுப்புப் பள்ளி மாணவன் மற்றும் நண்பன் குமார் ஆகியோருடன் சேர்ந்து கொலைத் திட்டம் தீட்டியுள்ளார் முருகேசன்.
அதன்படி பணிமுடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த சந்தோஷை தியாகரசனப்பள்ளி என்னுமிடத்தில் மூவரும் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாந்தோப்புக்குள் தப்பியோட முயன்ற சந்தோஷை விரட்டிப்பிடித்து கத்தியால் சரமாரியாக தாக்கி குத்திக்கொலை செய்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தலைமறைவாக இருந்த முருகேசன், குமார் மற்றும் 12ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
