Tamil News
கோழிக்கடையில், கோழியை துடிக்க துடிக்க சித்திரவதை செய்து வெட்டிக் கொன்ற கொடூரன்; வைரல் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்..!
கன்னியாகுமரி அருகே கோழியை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே உள்ளது மேடவிளாகம் என்ற பகுதி.
இங்குள்ள கோழி கடையில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், கோழியை உயிருடன் துடிதுடிக்க அறுத்துள்ளார்.
வழக்கமாக கோழியை பிடித்து, மிஷினில் போட்டு கொன்று, அதற்கு பிறகு சுத்தம் செய்து, கத்தியால் வெட்டி தருவது வழக்கம்.
அதாவது, கோழியின் தலையை துண்டித்துவிட்டு, உயிர் போன பிறகு, அதற்கு பிறகுதான் தோல் உரிக்கப்பட்டு துண்டுகளாக வெட்டுவார்கள்.
ஆனால், இந்த நபர், செல்போனை பார்த்து சிரித்து கொண்டே கோழியை வெட்டுகிறார்.
உயிருடன் இருக்கும் போதே கோழியின் தோலை உரிக்கிறார். இதனால் அந்த கோழி கதறி அழுதது.
ஆனால், எந்தவித மனவருத்தமும் இல்லாமல், மனசாட்சியும் இல்லாமல், குரூரமாக சிரித்துக்கொண்டே அந்த கோழியை வெட்டி உள்ளார்.
கோழிக்கறி வாங்க கடைக்கு போன ஒரு நபர், இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தும் இந்த இரக்கமற்ற செயலை செய்யும் நபரை போலீசார் உடனடியாக கைது செய்ய கேட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தமிழக, கேரளா எல்லை பகுதியான செங்கவிளை பகுதியை சேர்ந்த மனு ( 36 ) என்பவரை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கொல்லங்கோடு போலீசார் கைது செய்து உள்ளனர்.
