Viral News
பொதுத்தேர்வில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் செய்த சாதனை; குவியும் பாராட்டுக்கள்..!!
தெலுங்கான மாநிலத்தில் இண்டர் மீடியட் தேர்வுகள் வெளியான நிலையில் அதில் ஒட்டிய தலையுடன் வாழும் இரட்டை சகோதரிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 அம் வகுப்பு 12 ஆம் வகுப்புகள் இருப்பது போல தெலுங்கானாவில் இண்டர் மீடியட் இரண்டு ஆண்டுகள் உள்ளது.
அந்த வகையில் இண்டர் மீடியட் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே ,மாதம் நடைபெற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு முடிவுகள் வெளியாகின.
இதில் வீணா மற்றும் வாணி என்ற இரண்டு பெண்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கி பொதுத் தேர்வுகளில் முன்னணியில் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் இவர்கள் இருவரும் பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.
இரண்டு வெவ்வேறு பெண்களாக மற்ற உறுப்புகள் முழுமையாக இருந்தாலும், இவர்கள் இருவரின் தலையும் பிரிக்க முடியாது.
அன்றாட செயல்களே சவாலாக காணப்பட்டாலும், இந்த இரட்டைப் பெண்கள் அதை எளிதாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் கூட, இவர்களைப் பற்றிய செய்தி வைரலானது.
2003 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த வீணா மற்றும் வாணியை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால், இவர்களின் பெற்றோர் இவர்களை வளர்க்கவும், பராமரிக்கவும் வசதியில்லை என்று விட்டுச் சென்றனர்.
12 வயதில் இவர்கள் நிலோபர் மருத்துவமனையில் இவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில் ஒட்டிய தலையுடனே பள்ளி சென்று வந்த இந்த சகோதரிகள், தங்களது முதன்மை பாடமாக அரசியல் அறிவியல் பிரிவினை தேர்வு செய்து நல்ல மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
வீணா, 1000 மதிப்பெண்ணுக்கு 707 மதிப்பெண்ணும், வாணி 1000 மதிப்பெண்ணுக்கு 712 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் 70% சதவிகிதம் மதிப்பெண் வாங்கி, CA படிக்க விருப்பம் இருப்பதாக அடுத்த கட்டத்துக்கு செல்லவிருப்பது உண்மையில் மிகப்பெரிய சாதனை தான்.
அறுவை சிகிச்சை மூலம் கூட பிரிக்க முடியாத இந்த இரட்டையர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
பெற்றோர்கள் கைவிட்ட நிலையில், பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலிலும், இவர்கள் தொடர்ந்து கல்வியில் சாதனை செய்து வருவது பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
