Tamil News
நடைபாதையில் வசிக்கும் பிச்சைக்காரர்களின் குழந்தைகளை படிக்க வைக்கும் நல் உள்ளம் கொண்ட தம்பதி…!
பிச்சைக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உமா தனது சேவைகள் பற்றி கூறும் போது,
நானும், என் கணவரும், 10 வயதிலிருந்தே நண்பர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம், சின்ன வயதில் இருந்தே எங்கள் இருவருக்கும் உண்டு.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் அது தொடர, தொண்டு அமைப்பை துவங்கி, அதன் மூலம் உதவி செய்யலாமே என, நண்பர்கள் கூறினர்.
அப்படி, 13 ஆண்டுகளுக்கு முன் உருவானது தான், “சுயம்’ தொண்டு அமைப்பு.
ஒரு கட்டத்தில் வாழ்க்கையிலும், இணைந்து விட்டோம்.
கல்வி மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை, ஏழை மக்களுக்கு ஏற்படுத்துவது தான் முதல் கடமையாக எடுத்து செயல்பட்டோம்.
நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் பெற வழிவகை செய்தோம்.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுக்கிறோம்.
சிந்தாதரிப்பேட்டை அரசுப் பள்ளியில், 57 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், எங்கள் பயிற்சிக்குப் பின், 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிக்னலில் பிச்சையெடுத்து வாழ்ந்த 50 குடும்பங்களை மறு குடியமர்த்தியுள்ளோம்.
முன்பு பிச்சையெடுத்தவர்கள், இன்று சிக்னலில் பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்ததுடன், இப்போது அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல வைத்துள்ளோம்.
ஆனாலும் இன்றும் சிக்னலில் விடுமுறை நாட்களில் குழந்தைகள் பொருட்கள் விற்கின்றனர்.
அதையும் முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதே போல் நாடோடி பழங்குடியினர்களான, சாட்டையடித்து பிழைப்பவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் இருளர்கள் ஆகியோரது குழந்தைகளுக்கும் கல்வி கொடுத்து வருகிறோம்.
கீழ்ப்பாக்கம், பிளாட்பார பகுதியில் உள்ள, பிச்சைக்கார குடும்பங்களின் வாழ்க்கையை, “நடைபாதை பூக்கள்’ எனும் பெயரில், குறும்படமாக எடுத்தோம்.
கல்வி கிடைக்காததால், குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலத்தை சுட்டிக் காட்டினோம்.
பலரிடம் இருந்து, நிதி உதவி கிடைத்தது.
அதைக் கொண்டு, 20 குழந்தைகளை படிக்க வைத்தோம்.
ஆனால், தினமும் பள்ளி முடிந்ததும், அவர்கள் பிச்சை எடுக்கத்தான், செய்தனர்.
உண்டு, உறைவிடப் பள்ளியைத் துவங்கினால் தான், முழுமையாக மாற்ற முடியும் என தீர்மானித்து, பெரும் போராட்டத்திற்குப் பின், 2003ம் ஆண்டு, 30 குழந்தைகளுடன், “சிறகு மாண்டிசோரி’ பள்ளி ஆரம்பமானது.
தற்போது, 20 ஆசிரியர்களுடன், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிச்சைக்காரர்களின் குழந்தைகள் என கூறினார்.
