Viral News
கணவர் டிரைவர், மனைவி கண்டக்டர்; அரசு பேருந்தில் பணிபுரியும் காதல் தம்பதி; குவியும் பாராட்டுக்கள்..!
கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா. கேரள மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.
மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமானது அல்ல.
இந்த பேருந்தில், பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமிராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவை கொண்டுள்ளன.
பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியையே செலவிட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிக பெருமக்களும் உள்ளனர்.
இந்த பேருந்தில் அடிக்கடி வழக்கமாக பயணிப்பவர்கள் தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி உள்ளனர்.
இந்த வீடியோ வெளிவந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்து உள்ளனர்.
இதுபற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கிறோம். 2 மணிக்கு பேருந்து டெப்போவுக்கு செல்வோம்.
அதன்பின்னர், பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார்.
பின்பு எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என கூறுகிறார்.
இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது.
கிரிக்கு 26 வயது இருக்கும்போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர் காதல் வயப்பட்டு உள்ளனர்.
இருவரது காதலுக்கும் இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.
அவர்கள் பச்சை கொடி காட்டிய பின்பு இருவரும் திருமணம் செய்யலாம் என ஏறக்குறைய முடிவானபோது, ஜாதகம் ஒத்து போகவில்லை.
இதன்பின்னர் காத்திருந்து, கொரோனா ஊரடங்கின்போது இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
