Tamil News
பள்ளி வகுப்பறை, டேபிள், பெஞ்சை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்த மாணவர்கள்; வியந்து பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு…!!!
தூத்துக்குடியில் பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பறை பெஞ்ச், டெஸ்க், கரும்பலகைகளுக்கு பெயிண்ட் அடித்து சேவை செய்த செய்தி வலைதளங்களில் வைரலாக பரவியது.
அப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழகத்தில் சமீப காலமாக மாணவர் சமுதாயம் குறித்து மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடைப்பது, போதை வஸ்துக்களை அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த செயல்கள் ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் காவல்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், அதற்கு நேர்மாறாக தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயிலும் வகுப்பறைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் வகுப்பறை, மேஜைக்கு வண்ணம் தீட்டுவது, இருக்கைகளை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
தங்கள் வகுப்பறையை சீரமைப்பது குறித்த முடிவை எடுத்து தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலோடு இந்த நற்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
தலைமை ஆசிரியராகிய நீங்களும் உங்களது சிறந்த முயற்சியால் ஏற்கனவே மாணவச் சமுதாயத்தின் மேல் இருந்த ஒரு தவறுதலான கருத்தை மாற்றியுள்ளீர்கள்.
அந்த வகையில் நீங்கள் இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நல் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கருவியாக செயல் பட்டுள்ளீர்கள்.
இன்றைய மாணவச் சமுதாயத்தின் மேல் உருவாகியுள்ள தவறான கருத்தை மாற்றியமைக்க முற்பட்ட பாரதியார் வித்யாலயம் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் மனதார பாராட்டுகிறேன்.
இந்தச் செயல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனின் மனதையும் தொடும் என்றும் நம்புகிறேன்.
இந்தச் செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
