Sports News
பி.டி.உஷாவின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை தனலெட்சுமி; குவியும் வாழ்த்துக்கள்..!!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் (Dhanalakshmi)என்பவர் இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்பட்டு வரும் பி.டி.உஷாவின் 23 வருட சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறார்.
அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி சேகர்(23).
சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
மேலும் தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு முறையான பயிற்சி கிடைக்காமல் தவித்து வந்தார்.
இந் நிலையில் சில தன்னார்வலர்களின் உதவியோடு கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார்.
அதன் பயனாக சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாடிற்கும் இவர் இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் மாற்று வீராங்கனையாக மட்டுமே இவருடைய பெயர் சேர்க்கப்பட்டதால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
மேலும் டோக்கியோவில் இருந்தபோது அவருடைய சொந்த தங்கை இறந்துவிட்ட தகவல்கூட தெரியாமல் கடைசியில் சென்னை விமான நிலையத்தில் அவர் கதறி அழுதார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில் கலந்து கொண்டார்.
தேசிய அளவிலான இந்த போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில், தேசிய அளவில் சிறப்பு வாய்ந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில், தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
தேசிய அளவிலான வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
200 மீட்டர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்த தனலட்சுமி, இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு 200 மீட்டர் தடகள போட்டியில் 20.26 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது தனலட்சுமி 20.21 விநாடிகளில் கடந்து சாதனை முறியடித்து, வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இதேபோல் இரண்டாவதாக வந்த ஹிமா தாஸ், 20.24 விநாடிகளில் எல்லைக் கோட்டை கடந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தடகளப் போட்டியில் பிடி உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி மாணவிக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
