Tamil News
“வ.உ.சி. , வேலுநாச்சியார், பாரதியார், அப்துல்கலாம் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசம்” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்…!!
திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வேலுநாச்சியார் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று ஹோட்டல் முஜிப் பிரியாணி அறிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்த அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.
இதனிடையே, இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி தமிழக அலங்கார ஊர்தியை நிபுணர் குழு நிராகரித்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் அணிவகுக்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பெரும் வரவேற்பு எழுந்த நிலையில் சொன்னபடியே, சென்னையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
இந்த அலங்கார ஊர்திகளில் செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பெரியார், ஆகியோரின் சிலைகளும் இடம் பெற்றன.
இந்நிலையில் தமிழர்களின் வீரத்தை நினைவு கூறுவோம் என்கிற முழக்கத்துடன் திண்டுக்கல் ஹோட்டல் முஜிப் பிரியாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், வ.உ.சி, வேலுநாச்சியாரை யார் என கேட்க நீங்க யார்? நம் வீரர்களை நாம் நினைவு கூறுவோம்.
வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், அப்துல்கலாம், பாரதியார் இவர்களைப் போன்று மாறுவேடத்தில் வரும் குழந்தைகளுக்கு இரண்டு சிக்கன் பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும்.
தமிழர்களின் வீரத்தை எடுத்துரைப்போம் இந்த உலகத்திற்கு என அறிவித்துள்ளது திண்டுக்கல் முஜிப் பிரியாணி ஹோட்டல்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
