Politics
எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் வெற்றிக் கொடி நாட்டிய திமுக; அதிர்ச்சியில் அதிமுக..!!
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணும் மையம் அருகே திரண்டு இருந்தனர்.
காலை 7 மணி முதல் கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 16 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் அந்த வார்டில் உள்ள அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
