Viral News
மசால் போண்டா வாங்க ரயிலை நிறுத்திய டிரைவர்; வெளியான வைரல் வீடியோவால் டிரைவருக்கு ஏற்பட்ட துயரம்..!!
உணவு மேல் ஆசை கொண்டவர்கள், ருசியான உணவு எங்கு கிடைத்தாலும் அங்கு சென்று ருசிப்பதை வாடிக்கையாக கொள்வார்கள்.
இதற்காக பல கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தாலும், தூரத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
அந்த வகையில் ஒரு சுவையான தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை நிறுத்தி டிரைவர் சென்று வாங்கி வந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் கச்சோரி ( kachori) எனப்படும் உணவு மிகவும் பிரசித்தி பெற்றது.
உள்ளே மசாலாவுடன் கிட்டத்தட்ட போண்டா மாதிரி செய்யப்படும் இந்த பதார்த்தத்திற்கு கிராக்கியும் அதிகம்.
அப்பகுதிக்கு செல்பவர்கள் பலரும் இந்த புகழ்பெற்ற கச்சோரியை ருசிக்க விரும்புவார்கள்.
இதன் ருசிக்கு அடிமையான காரணத்தால் 5 ஊழியர்களை பணி இடை நீக்கம் செய்திருக்கிறது ராஜஸ்தான் ரயில்வே நிர்வாகம்.
அல்வார் பகுதியில் உள்ள தவுத்பூர் கிராஸிங்கில் இந்த புகழ்பெற்ற கச்சோரியை வாங்க ஓட்டுநர் ஒருவர் ரயிலையே நிறுத்திய சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் ஹாட் டாபிக்.
அல்வாரில் ரயில் ஓட்டுநர் ஒருவர் தினமும் காலை 8.00 மணியளவில் ஓடும் ரயிலை நிறுத்துகிறார்.
அந்த ரயிலை நோக்கி இன்னொரு நபர் ஓடி வருகிறார். அந்த ஓடிவரும் நபரின் கையில் ஒரு பாக்கெட் இருக்கிறது.
அந்த பாக்கெட்டை வாங்கிய பின் ரயில் ஓட்டுநர் மீண்டும் வந்து ரயிலை இயக்கத் தொடங்குகிறார். இந்த சம்பவம் தினமும் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், கச்சோரி வாங்க ரயிலை ஓட்டுநர் நிறுத்திய இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ வைரல் ஆனதால், பொறுப்பின்றி செயல்படும் ரயில்வே ஊழியர்களை நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர்.
இந்த விஷயம் ராஜஸ்தான் ரயில்வே மேலதிகாரிகளின் காதுகளை எட்டி இருக்கிறது.
இதனை அடுத்து 5 பேரை பணி இடை நீக்கம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு லோக்கோ பைலட்டுகள், இரண்டு ரயில்வே கேட் பணியாளர்கள், ஸ்டேஷன் கண்காணிப்பாளர் ஆகிய ஐந்து பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கச்சோரி வாங்க ரயிலையே ஓட்டுநர் நிறுத்திய வீடியோ தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது
