Tamil News
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மாநில அளவில் தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கிய ஒரே மாணவி துர்கா; குவியும் பாராட்டுக்கள்..!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.
நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர்.
மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.
10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், 10 ஆம் வகுப்பில் 97.22 சதவீதம் தேர்ச்சியுடன் தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.
அதே போல், வெறும் 79.87 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று, வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்து உள்ளது.
இதில் தமிழ் பாடத்தில் ஒரேயொரு மாணவர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மொழிப் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் என்னும் சாதனை எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை.
இந்நிலையில் 10 ஆம் வகுப்புத் தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று, திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இவர்.
இவரது தந்தை பெயர் செல்வகுமார். இவர் ஆறுமுகநேரி பகுதியைச் சார்ந்த காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி துர்காவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
