Tamil News
தாய் தறி நெய்யும் தொழிலாளி; மகள் நீட் தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம்; குவியும் வாழ்த்துக்கள்..!
மருத்துவ படிப்புக்கான நீட் தரவரிசை பட்டியலில் ஈரோடு கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பொம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி.
நெசவுத்தொழில் செய்து வந்த இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியின் மகள் தேவதர்ஷினி கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார்.
ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்காததால் விரக்தி அடைந்தார்.
பின்னர் தாய் கோடீஸ்வரியின் அறிவுரைப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோச்சிங் சென்டர் ஒன்றில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் தேர்வு எழுதினார்.
இந் நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் 518 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் தேவதர்ஷினி.
சாதனை படைத்த மாணவி தேவதர்ஷினியை கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
மேலும் ஏராளமானோர் மாணவி தேவதர்ஷினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
