Tamil News
வலது காலில் ஏற்பட்ட வலிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அரசு டாக்டர்; கதறி அழுத பாட்டி..!!
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டிக்கு வலது காலில் ஏற்பட்ட வலிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (67).
மணி முருக குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த தம்பதியின் மகன்கள் வெளியூரில் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு மகன்கள் இருந்த போதிலும், குருவம்மாள் தனியாகவே வசித்து வருகிறார். கல்குவாரியில் வேலைப் பார்த்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் குருவம்மாள் கடந்த ஜனவரி மாதம் வலதுகால் மூட்டுப்பகுதியில் வலி இருப்பதாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனிவாசகன் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 4-ந் தேதி அவரது டாக்டர் சீனிவாசன் தலைமையில் மூதாட்டிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.
மயக்கம் தெளிந்து கண் விழித்த குருவம்மாள் அதிர்ச்சியுற்றார். இரு கால்களும் வலிப்பதாக தெரிவித்தார்.
மேலும், வலது காலுக்கு பதிலாக இடது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக மூதாட்டி குருவம்மாள் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
இதனால் தனக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குருவம்மாள் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் டாக்டர் சீனிவாசன் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றப் பட்டார். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
