Uncategorized
ஆற்றில் தத்தளித்த 9 பேரை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய மீனவர்; குவியும் பாராட்டுக்கள்..!!
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் புனித தோமையார் ஆலயத்திற்கு சென்ற பெண் பக்தர்களில் சிலர் உப்பாற்றில் குளிக்க இறங்கி நீரில் மூழ்கிய நிலையில், தனி ஒருவராக அனைவரையும் மீட்ட மீனவர் ஜேமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உப்பாற்று நீரோட்டத்தின் நடுவே தீவு போன்ற பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது
புனித தோமையார் ஆலயதிற்கு செல்ல வேண்டுமெனில் தாமிரபரணி 6 கிளைகளாக பிரிந்து செல்லும் உப்பாற்களை அவர்கள் கடந்து செல்லவேண்டும்.
சாம்பல் புதன் நாளில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரையிலான 40 நாட்களுக்கு தவ காலம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாட்களின் போது, கிறிஸ்தவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபடுவர்.
அந்த வகையில் பக்தர்கள் படகில் புனித தோமையார் ஆலயம் சென்று வழிபட்டு வருகின்றனர்.
அப்படி, சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் புனித தோமையார் ஆலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, உப்பாற்றில் நீரோட்டம் அதிகமானதால் அதில் 9 பெண்கள் சிக்கி உயிருக்கு போராடி உள்ளனர்.
அந்த நிலையில் தனது பைபர் படகில் அப்பகுதிக்கு தற்செயலாக சென்ற ஜேமன் என்ற மீனவர் பெண்கள் ஆற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்று நீரில் குதித்து, ஒவ்வொருவராக காப்பாற்றி தனது படகில் ஏற்றியிருக்கிறார்.
9 பேரையும் துரிதமாக மீட்ட ஜேமன், அவர்களை புன்னைக்காயல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்.
சரியான நேரத்தில் ஆறில் தத்தளித்த நபர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால் 9 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தங்களுடைய உயிரை காப்பாற்றிய ஜேமனுக்கு கண்ணீர்மல்க அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உயிர் பிழைத்த பக்தர்கள் கொடுத்த பணத்தை ஜேமன் வாங்க மறுத்துள்ளார்.
தனி ஒருவனாக நின்று தன் உயிரைக் பணயம் வைத்து 9 பேரையும் மீட்டு கரை சேர்த்த மீனவர் ஜேமனை பொதுமக்கள் பாராட்டினர்.
அவரின் இந்த சேவையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் கவுரவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
