Tamil News
7000 ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோவில் திருவிழா; 60 கிடா வெட்டி கறி விருந்து நடத்திய கிராம மக்கள்…!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமத்தில் உள்ள கருப்பையா முத்தையா கோயில் மிகவும் சிறப்புடையது.
இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்கும் வழக்கம் இல்லை, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே கூடி இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுக்கு ஒரு வேலை செய்து ஏற்பாட்டை செய்து முடித்த குழுவினர், நீண்ட வரிசையில் வாழை இழையை விரித்து சாதமும் மற்றும் ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கறிவிருந்து முடிந்ததும் ஆண்கள் அனைவரும் இலையை எடுக்காமல் திரும்பிவிடுவர்.
இலைகள் காய்ந்து, அந்த பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற மரபு உள்ளதாகவும், அது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆண்கள் இந்த திருவிழாவில் திரளாக கலந்து கொண்டு அசைவ உணவை ருசித்தனர்.
