Tamil News
தான் வேலை பார்த்த நகைக்கடையில் தினமும் சிறுக சிறுக திருடி 41 பவுன் சேர்த்த இளம்பெண்; அதிர்ச்சியில் போலீசார்..!!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நகைக் கடையில் 41 பவுன் தங்க நகை,1½ கிலோ வெள்ளி ஆபரணங்கள் திருடிய பெண் விற்பனையாளர் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் திருநெல்வேலி பகுதியில் திருமலை ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார்.
சில நாட்களாக ராமச்சந்திரனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் அவர் கடைக்கு வருவதை நிறுத்திவிட்டார்.
திடீரென ஒரு நாள் கடைக்கு வந்து ஆய்வு செய்தபோது நகைகளின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கடையில் வேலை பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் சிசிடிவிகளை பொருத்தியுள்ளார்.
அப்போது கடையில் வேலை பார்த்து வந்த அங்கு கலந்தபனையை சேர்ந்த சுபா 22, என்ற பெண் யாருக்கும் தெரியாமல் தனது போன் கேஸில் நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது.
அதன்படி அவர் 41 பவுன் தங்க நகைகளையும், 1½ கிலோ வெள்ளி நகைகளையும் திருடியுள்ளார்.
இதன் மதிப்பு மட்டும் 23 லட்சம் ஆகும்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.
இதன் பேரில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா ஆலோசனைப்படி, இன்ஸ்பெக்டர்கள் சாகுல்ஹமீது, சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, வள்ளியூரில் வைத்து சுபா, அவருடைய தாயார் விஜயலட்சுமி (48) ஆகிய 2 பேரையும் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 41 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேரையும் போலீசார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
