World News
பிறந்த நாளில் ஆசையுடன் பள்ளி சென்ற 4 வயது சிறுமியை பேருந்திற்குள் வைத்து தவறுதலாக பூட்டிய டிரைவர்; மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..!!
கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர்.
அபிலாஷ், டிசைனர் மற்றும் ஆர்ட்டிஸ்ட், கடந்த பல ஆண்டுகளாக தோஹாவில் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு மீகா மற்றும் மின்சா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீகா, எம்இஎஸ் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார்.
மின்ஸா தோஹாவில் உள்ள அல் வக்ராவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியில் எல்கேஜி-1 படித்து வருகிறார்.
கடந்த செப்.11 ஞாயிற்றுக்கிழமை மின்சாவுக்கு பிறந்த நாள் ஆகும்.
அன்றைய தினம் வழக்கம் போல காலையில் பேருந்தில் பள்ளிக்குச் சென்றார் மின்சா.
ஆனால், செல்லும் வழியில் பேருந்திலேயே துாங்கிவிட்டார்.
பள்ளி வந்ததும் மற்ற மாணவ – மாணவியர் அவரவர் வீட்டிற்கு இறங்கி சென்று விட்டனர்.
ஆனால் மின்ஸா மட்டும் பேருந்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி விட்டார்.
இதை கவனிக்காத பள்ளியின் பேருந்து ஊழியர்கள், கதவுகளை அடைத்துவிட்டு சென்று விட்டனர்.
பின்னர் பள்ளி முடிந்து புறப்படும் போது, பேருந்துக்குள் மாணவி மின்ஸா மயக்க நிலையில் இருந்ததை பள்ளி பேருந்து ஊழியர்கள் கண்டனர்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்து கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உடலை கேரளா எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அச்சிறுமியின் பெற்றோரை கத்தார் நாட்டின் கல்வி அமைச்சர் புதைனா அல்-நுஐமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சகம் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
