Sports News
தமிழ் பெண்ணை மணக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் தமிழ் திருமண அழைப்பிதழ்..!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
இந்நிலையில், அவர்களது மங்களகரமான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னராக திகழ்கிறார்.
ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை இந்த முறை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.
இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவர் வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாக (ஆஸ்திரேலிய நேரப்படி) ரிஷப லக்னத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினிராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது கல்யாணம் வரை வந்துவிட்டது.
இவர்களது திருமணத்தை காட்டிலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிகை வைரலாகி வருகிறது.
இவர்களுக்கு மெல்போர்னில் திருமணம் நடத்தப்படுகிறது.
வினிராமனின் பெற்றோர் வெங்கட்ராம ராமானுஜ தாஸன், ஸ்ரீமதி விஜயலட்சுமி ராமன் என்றும் அது போல் மேக்ஸ்வெல்லின் பெற்றோர் நீல் மேக்ஸ்வெல்- ஜாய் என்றும் அந்த பத்திரிகையில் போடப்பட்டுள்ளது.
இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள், மேக்ஸ்வெல் – வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
