Viral News
கல்விக்கு வயது தடையில்லை; 68 வயதில் பிளஸ் டூ பாஸ் செய்த மூதாட்டி; குவியும் பாராட்டுக்கள்..!
கேரளா மாநிலத்தில் 68 வயதான மூதாட்டி ஒருவர் பிளஸ் டூ தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி. இவருக்கு வயது 68.
இவரின் பெற்றோரான வாசு தேவன் பிள்ளை, பார்கவி அம்மா ஆகியோரின் ஏழாவது குழந்தை தான் விஜயகுமாரி.
இளம் வயதில் 10ஆம் வகுப்பு முடித்த நிலையில் இவருக்கு திருமணம் ஆனதால் மேற்கொண்டு தனது படிப்பை இவரால் தொடர முடியவில்லை.
இவரது கணவர் முதுகுளத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்துள்ளார்.
காலங்கள் பல உருண்டோடின. ஆனாலும் தனது படிப்பை தொடர முடியவில்லையே என்கிற வருத்தம் மட்டும் விஜயகுமாரியை விட்டு அகலவேயில்லை.
விஜயகுமாரிக்கு குழந்தை பிறந்து பின்னர் அவர்களுக்கும் திருமணம் ஆகி அவர்களும் பிள்ளைகள் பெற்று விட்டனர்.
வயதான நிலையில் தனது பேரப்பிள்ளைகளுடன் விஜயகுமாரி பொழுதை கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில் எதேச்சையாக தனது பேரன் விவேக் பிரகாஷிடம் தான் கல்வி மீது கொண்டிருந்த ஆர்வத்தை கூறியுள்ளார்.
பாட்டியின் மன உணர்வை புரிந்து கொண்ட விவேக் வயதானவர்களும் பிளஸ் 2 படிக்கும் வசதி அங்குள்ள செங்கனூரில் உள்ள வயதானவர்கள் படிக்கும் பள்ளியில் தனது பாட்டியை சேர்த்து விட்டார்.
அத்தோடு நிற்காமல் தனது பாட்டி படிப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து புரிந்து வந்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வுக்காக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு படித்து வந்துள்ளார் விஜயகுமாரி.
தேர்வு நேரங்களில் நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை கடுமையாக படித்து வந்துள்ளார்.
தனது விடாமுயற்சியால் ஆர்வத்துடன் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளார் விஜயகுமாரி.
68 வயதான விஜய குமாரிக்கு பிளஸ் 2 படித்து முடித்தவுடன் நிறைவு வந்துவிடவில்லை.
எப்படியாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்று விட வேண்டும் என அவா அவருக்கு உள்ளது.
எனவே, அடுத்து ஹியூமானிடீஸ் படிப்பில் இளங்கலை பட்டம் பெற தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் விஜயகுமாரி.
