Tamil News
வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுவை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்; வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
வகுப்பறையில் மாணவிகள் கும்பலாக குளிர்பான பாட்டிலில் மதுபானம் கலந்து அருந்தும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் மாணவிகளும் படித்து வருகின்றனர்
இந்த நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில பாக்கெட் மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனர்.
இதனை மாணவிகள் தங்களது மொபைல்களில் வீடியோவும் எடுத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
கடந்த சில நாட்களாக அதிகளவில் பகிரப்பட்டு வந்த இந்த வீடியோ கல்லூரி முதல்வரின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து வீடியோவில் மது அருந்திய மாணவிகள் யார் என கண்டறிந்து அவர்களை அழைத்து முதல்வர் விசாரணை மேற்கொண்டார்.
கல்லூரி மாணவிகளிடம் விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் மாணவிகளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.
அப்போது அவர்களுக்குள்ளே விளையாட்டாக எடுத்த வீடியோதான் தற்போது அவர்களுக்கு வினையாக முடிந்திருப்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை தற்காலிக இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
