Spiritual
“பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் சதுரங்கம் ஆடிய வரலாறு” – பிரதமர் மோடி கூறிய சதுரங்க வல்லபநாதர் கோவில்..!
சதுரங்க விளையாட்டில் வெற்றி கண்டு பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்த வரலாறு குறித்து இங்கே காண்போம்.
சென்னையில் நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமாக நடந்த விழாவில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.
இந்த விழாவில் கடவுள் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதராக பார்வதியை மணம் செய்வதற்காக செஸ் விளையாடினார் எனவும், அந்த திருத்தலம் திருவாரூரில் உள்ளது எனவும் பேசினார்.
சதுரங்கம் ஆடி சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை இங்கே காண்போம்.
திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
இக்கோயிலில் மூலவராக அமைந்திருக்கும் சதுரங்க வல்லப நாதர் புஷ்பவன நாதர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தாயார்கள் கற்பகவல்லி மற்றும் ராஜராஜேஸ்வரி.
கோயிலின் தலவிருட்சமாகப் பலா மரம் உள்ளது.
மேலும் இது தேவாரப் பாடல்கள் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவ தலங்களில் 103வது சிவதலமாக இக்கோயில் உள்ளது.
இந்த மூலவருக்குச் சதுரங்க வல்லவனாக என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது அந்த தல வரலாறு குறித்து இங்கே காண்போம்.
வசுதேவன் என்ற மன்னன் திருநெல்வேலி வேலியை ஆட்சி செய்து வந்தார். தனக்குக் குழந்தை வரம் வேண்டி தாமிரபரணி ஆற்றிலிருந்த தாமரை மலரின் மேல் கடும் தவம் செய்தார் அந்த மன்னர்.
தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் குழந்தை பாக்கியம் அருளினார்.
அப்போது அவரது முன் தாமரை மேல் இருந்த சங்கைச் சிவபெருமான் எடுக்கச் சொன்னார்.
அந்த சங்கு பார்வதி தேவியின் அம்சமாக அழகிய பெண் குழந்தையாக உருவெடுத்தது. அந்த குழந்தைக்கு மன்னர் ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டார்.
எல்லா கலைகளையும் கற்று வளர்ந்த அந்தப் பெண், சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக அவர் இருந்தார்.
திருமண வயதை எட்டிய அந்த பெண்ணிற்கு மன்னர் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்.
அப்போது அந்த மன்னர் சதுரங்க விளையாட்டில் யார் தனது பெண்ணை வெற்றி பெறுகிறார்கள் அவருக்கே அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தார்.
பல தேசத்திலிருந்து வந்த மன்னர்கள் ராஜராஜேஸ்வரியிடம் சதுரங்க போட்டியில் தோல்வி அடைந்தார்கள்.
மணமகன் அமையாத துக்கத்தில் மன்னர் மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் செய்கிறார்.
பின்னர் சிவபெருமான் காட்சி தர, தனக்கு நல்ல மணமகன் வேண்டும் எனச் சிவபெருமானிடம் அந்த மன்னர் கோரிக்கை வைத்தார்.
உடனே சிவபெருமான், காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள எல்லா சிவதலங்களிலும் வழிபாடு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மன்னர் தனது குடும்பத்தோடு எல்லா சிவதலங்களிலும் வழிபாடு செய்வதற்காகச் செல்கிறார்.
அப்போது பூவனூரில் அமைந்திருக்கும் புஷ்பவன நாதர் கோயிலுக்குச் செல்கிறார்.
அப்போது அந்த கோயிலிலிருந்த சிவபெருமான் சித்தர் வேடத்தில் வந்து, நான் உங்கள் பெண்ணோடு சதுரங்க விளையாட்டை விளையாடுகிறேன் எனக் கூறினார்.
அவரை ஏளனமாக நினைத்த மன்னர் சரி விளையாடுங்கள் என அனுமதித்து விட்டார். அந்த போட்டியில் சித்தராக வந்த சிவபெருமான் வெற்றி அடைந்து விடுகிறார்.
உடனே அதிர்ச்சி அடைந்த மன்னன் ஒரு சித்தருக்கு தன் பெண்ணை எப்படி திருமணம் செய்து தருவது என வருத்தம் அடைகிறார்.
உடனே சித்தர் வேடத்திலிருந்த சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டுகிறார்.
பின்னர் ஆனந்தம் அடைந்த மன்னன் தனது மகளான ராஜேஸ்வரியைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து தருகிறார்.
பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் தான் சித்தராக மாறுவேடத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
இக்கோயில் திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் பஸ்சில் நீடாமங்கலம் சென்று அங்கிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பூவனூர்.
இங்கு அமைந்துள்ளது சதுரங்க வல்லபநாதர் கோயில்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 166 வது தேவாரத்தலம் ஆகும்.
