Tamil News
செல்போனில் சிரித்து சிரித்து பேசிய மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த பகீர் செயல்; திகிலில் கிராம மக்கள்..!!
சேலம் அருகே செல்போனில் பேசிய மனைவியை சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார் (40).
இவர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள சசிகலா, ஆசிரியர் வேலைக்கு செல்ல தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது கணவர் ஜெயக்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலத்துடன் ஜெயக்குமார் தனது சொந்த ஊரான கோவிந்தராஜபாளையத்திற்கு சென்றுள்ளார் .
அப்போது, சசிகலாவின் உறவினர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சசிகலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
அப்போது கணவன் ஜெயக்குமாரிடம் போலீசார நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
விநாயகபுரத்தை சேர்ந்த சசிகலா என்பவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் மனைவி சசிகலா வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கணவர் ஜெயக்குமார் ஒரு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அப்போது மனைவி சசிகலா செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெயக்குமார் கண்டித்து உள்ளார்.
இதை மனைவி சசிகலா கேட்காத காரணத்தால் கடந்த13-ம் தேதி மீண்டும் கணவர் ஜெயக்குமார் கண்டித்து உள்ளார்.
அப்போது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கணவன் ஜெயக்குமார் கயிற்றால் மனைவி சசிகலா கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார்.
பின்னர் தனது பெரியப்பா செல்வராஜின் உதவியுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று ஜெயக்குமார் நாடகம் நடத்தி உள்ளார்.
இதனை அடுத்து மனைவி சசிகலாவின் உடலை போலீசாருக்கு தெரியால் அடக்கம் செய்ய கணவர் ஜெயக்குமார் முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதனை அடுத்து ஜெயகுமார், அவரது பெரியப்பா செல்வராஜ் மற்றும் சசிகலாவின் உடலை காரில் எடுத்துச் சென்ற காரின் உரிமையாளர் குமரேசன் உட்பட மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
