Uncategorized
பணியாரம் ருசியாக இல்லை என்று சொன்ன மனைவி; ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்…!!
சேலம் அருகே வாங்கி வந்த பணியாரம் ருசியாக இல்லை என கூறிய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
கூலித் தொழிலாளியான இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
லட்சுமணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாய் காளியம்மாள் தனது மகள் சரண்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இயற்கையாக சாகவில்லை அவரை அவரது கணவர் லட்சுமணன் அடித்து கொலை செய்து விட்டதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
சரண்யா பள்ளியில் படிக்கும்போது லட்சுமணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமணன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு குடிபோதையில் இருந்த லட்சுமணன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஓட்டலில் இருந்து பணியாரம் வாங்கி வந்துள்ளார்.
அதனை சாப்பிட்ட சரண்யா பணியாரம் ருசியாக இல்லை என்றும், பனியாரம் கூட சரியாக வாங்கி வர தெரியாதா?
நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? என கணவனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், சரண்யாவை அடித்து கீழே தள்ளி, கழுத்தை நெரித்தது தெரியவந்தது.
வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் லட்சுமணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
