Viral News
இந்த காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா?? தமது சொந்த செலவில் TV வாங்கி வீடு வீடாக சென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்; வியந்து பாராட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்..!!
சீர்காழி அருகே சக்கர நாற்காலியில் இணைய வசதியுடன்கூடிய நவீன தொலைக்காட்சிப் பெட்டியை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்சு. சீனிவாசன்(53)
மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாததால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இதனை அறிந்த சீனிவாசன் தனது சொந்த செலவில் ஒரு தொலைக்காட்சி வாங்கி, அதை நெம்மேலி கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதி வீதியாக மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுத்து வருகிறார்.
மாணவர்களின் நலனில் என்றும் அக்கறைக்கொண்ட ஆசிரியர் சு.சீனிவாசன் அகில இந்திய வானொலி மாணவர்களின் “சிறுவர் சோலை’ நிகழ்ச்சியில் கிராமப்புற பள்ளி மாணவர்களை பங்கேற்க பயிற்சி அளித்தவர்.
அன்பு பாலம் கல்யாணசுந்தரனாரால் பாராட்டுப் பெற்றவர்.
நாள்தோறும் தான் பணி புரியும் பள்ளிக்கு முதல் ஆளாக சென்று பள்ளியை திறந்து மாணவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பவர். அவர்கள் வந்ததும் ஆர்வமாக பாடம் நடத்தி வருபவர் இவர்.
ஆசிரியர் சீனிவாசனின் இந்த கல்விச் சேவையைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காலத்தில் நெம்மேலி நெப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கக்கூடிய வகையில் தங்களுடைய வருமானத்தில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கி அரசு தொலைக்காட்சியான ‘கல்வி’ மூலம் அக்கிராம மாணவர்களுக்குக் கல்வி போதித்து வரும் உங்களது ஆசிரியர் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உங்களின் ஆசிரியர் பணி மேன்மேலும் சிறக்கவும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
