Tamil News
“பணத்தை கொடு; பிணத்தை தரேன்” – விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை தர லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்; வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் நகரின் மையப்பகுதியில் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் கொளந்தானூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனையானது கட்டப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த ஊழியர்கள் ஒருபுறம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் ஒருபுறம் என பலர் பணியாற்றி வருகின்றனர்.
இம்மருத்துவமனையை பொறுத்தவரை நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருவதாக மக்களிடம் ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளது.
நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோயாளிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு லஞ்சம், பிரசவத்திற்கு லஞ்சம் என்று குற்றச்சாட்டு அதிக அளவில் எழுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறையிலும் லஞ்சம் விஸ்வரூபம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக விபத்து மற்றும் தற்கொலை தொடர்பான வழக்குகளில் பிரேத பரிசோதனைக்காக வரும் உடல்களுக்கு லஞ்சமாக அவர்களது உறவினர்களிடம், ரூபாய் 2000 முதல் 4000 வரை வாங்கபடுவதாக புகாரானது ஏற்கனவே எழுந்துள்ளது.
இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது கேரளாவிலிருந்து கரூருக்கு பெயிண்டிங் தொழில் செய்ய வந்த நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அமரர் ஊர்தி ஓட்டுநர் முதல் அனைவருமே லஞ்சம் வாங்கியுள்ளனர்.
மேலும் காவல் துறையை சேர்ந்த ஒருவரும் அந்த வீடியோ காட்சியில் உள்ளதால், அவருக்கும் இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே உயிரை பறிகொடுத்து துயரத்தில் இருப்பவர்களிடம் செய்யும் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு, லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் மருத்துவரும் மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
