Viral News
நிலமற்ற 10 ஏழைகளுக்கு தங்களது சொந்த நிலத்தை பிரித்து கொடுத்த தம்பதி; குவியும் பாராட்டுக்கள்..!!
என்னதான் கோடீஸ்வரராக இருந்தா கூட ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் பண்பு எளிதில் எல்லோருக்கும் வந்து விடாது.
அத்தகைய நற்பண்பு வெகுசிலருக்கு மட்டுமே அமைந்திருக்கும். அந்த வகையில் நிலமற்ற 10 ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளனர் கேரளாவை சேர்ந்த நல் உள்ளம் கொண்ட தம்பதி.
கேரள மாநிலம் பலால் மற்றும் கோடோம்-பெல்லூரை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இவர் சிறந்த அக்குபஞ்சர் டாக்டரும் கூட.
இவரது மனைவி ஜெயா சஜீவ். இந்த தம்பதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக கனகப்பள்ளியில் நிலம் வாங்கியுள்ளனர்.
அப்போது அவர்கள் ஒரு இருவரும் அற்புதமான ஒரு முடிவை எடுத்தனர்.
அதாவது புது வீடு கட்டி குடியேறுவதற்குள் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர்.
தேவையுள்ள சிலருக்கு பண உதவி செய்யலாம் என சஜீவ் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அவரது மனைவி ஜெயா வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நிலம் கொடுத்து உதவலாம் என முடிவெடுத்தார்.
இந்நிலையில், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும் பணியை தொடங்கினர்.
2021 டிசம்பரில், பணிகள் முடியும் தருவாயில் இருந்தபோது, நிலமற்ற 10 குடும்பங்களுக்கு நிலம் கொடுப்பது குறித்து தனது நண்பர்களிடம் தெரியப்படுத்தினர்.
கனகப்பள்ளியில் உள்ள செயின்ட் மார்டின் டி போரஸ் தேவாலயத்தின் விகாரி பீட்டர் கனீஷ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்தனர்.
இந்தக் குழு செய்தியாளர் சந்திப்பை நடத்தி டிசம்பர் மாதம் நிலத்திற்கான விண்ணப்பங்களை கோரியது.
கோட்டயம், சேர்த்தலா போன்ற இடங்களில் இருந்து 60 விண்ணப்பங்கள் குவிந்தன.
கண்ணூர் மற்றும் காசர்கோட் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளின் விண்ணப்பங்களை இந்த குழு பட்டியலிட்டது.
பின்னர் விண்ணப்பதாரர்கள் வீட்டிற்கும் நேரில் சென்று அவர்கள் தகுதியானவர்களா? என ஆய்வு நடத்தினர்.
இந்த முடிவில் தகுதியுள்ள நபர்களாக 7 இந்துக்கள், இருவர் முஸ்லிம்கள் மற்றும் ஒரு கிறிஸ்தவர் இடம் பிடித்தனர்.
இந்த பட்டியலில் மேற்கு எளேரி பஞ்சாயத்து பீமநடி கூலிப்பாறையில் 26 ஆண்டுகளாக வாடகை வீட்டில் நோயுற்ற பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் தனியொரு தாயாக போராடி வரும் சந்தியா வினீத் என்பவரும் ஒருவர்.
இதேபோல் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பாவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் முதுகு தண்டில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேலையை இழந்து, விதவையான லீலாம்மா இரண்டு சிறு குழந்தைகளுடன் போராடி வருகிறார்.
இப்படி உண்மையாகவே உதவி தேவைப்படும் நபர்களை குழு சல்லடை போட்டு சலித்து எடுத்துள்ளது.
சாலையோர மனைகளின் மார்க்கெட் விலை ஒரு சென்ட் ரூ.1 லட்சம் ஆகும். ஒவ்வொரு மனைக்கும் சாலை வசதி இருக்கும் வகையில் சஜீவ் சுமார் 60 சென்ட்களை ஒதுக்கியுள்ளார்.
கடந்த மே மாதம் 8-ம் தேதி சஜீவ் எம் ஜி மட்டத்தில் மற்றும் அவரது மனைவி ஜெயா சஜீவ் ஆகியோர், தலா ஐந்து சென்ட் நிலங்களை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளனர்.
தற்போது இந்த குழு அவர்கள் வீடு கட்ட தேவையான உதவிகளை செய்து வருகிறது.
இவர்களின் இந்த சேவையை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் இவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
