Tamil News
பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால், சிகிச்சையளித்த பெண் மருத்துவர் மன வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை..!
பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததால் பெண் மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
மருத்துவர் அர்ச்சனா ஷர்மா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்தது, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்காக மருத்துவர் அர்ச்சனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இன்று மருத்துவமனையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேவையில்லாமல் அப்பாவி மருத்துவர்களை வன்கொடுமை செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ட்விட்டரில் மருத்துவர் அர்ச்சனாவுக்கு நியாயம் கேட்டு பல மருத்துவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
மருத்துவரை விசாரிக்காமல் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். #Justice_For_Dr_Archana என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
