Tamil News
ஜாதி மாறி காதலித்த ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்..!!
இருவேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடியின் உடல் வாய்க்காலில் மிதந்து சென்றபோது காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே பொங்கலூரை அடுத்த கொடுவாயை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் நரேஷ் குமார் (வயது 18). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
பொங்கலூர் அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரது மகள் பவிஷா (18).
இவர் பிளஸ்-2 முடித்து விட்டு பியூட்டி பார்லர் பயிற்சிக்காக சென்று வந்தார்.
இவர்கள் இருவரும் பொங்கலூர் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு இருதரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பவிஷாவை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, காதல் விவகாரம் என்பதால் இருவரையும் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் ஆண் – பெண் என ஜோடியின் சடலம் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் யார்? என்ற விசாரணை நடந்தபோது பவிஷா மற்றும் நரேஷ் குமார் என்பது உறுதியாகவே, காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோடி தற்கொலை செய்திருக்கலாம் என்பது உறுதியானது.
இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
