Tamil News
“அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும்”- உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..!!
அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் காதல் ஜோடி எடுத்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் சோலை மீனா (வயது 20).
விருதுநகரில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சிப்பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்த நிலையில் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியிலும் பகுதிநேர பணியாற்றி வந்துள்ளார்.
செவிலியர் பயிற்சி பள்ளி விடுதியிலேயே தங்கி படித்ததோடு பணியாற்றி வந்துள்ளார்.
இவரும் சாத்தூர் அருகே உள்ள சிறு குளத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காதலுக்கு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் அதனுடன் இணைந்த தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருபவர்களால் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருவரும் இணைய முடியாது என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
காதல் தோல்வியால் சோலைமீனா மிகுந்த விரக்தியில் இருந்த நிலையில் பிரவீன்குமார் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ரெயில் பாதையில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்தார்.
இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சோலை மீனாவின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோலை மீனா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேள்வியுற்ற பிரவீன் குமார் இன்று காலை 11 மணிக்கு விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள ரெயில் பாதையில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பாய்ந்தார்.
ஆனால் படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரவீன்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
நீயும் (சோலை மீனா), நானும் சேர்ந்து வாழ முடியவில்லை. சாகவும் முடியவில்லை. ஏன் என்னை விட்டுச் சென்றாய்?.
நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் எப்படி வாழ்வேன்?
என்னை மன்னித்துவிடு. தற்கொலைக்கு முக்கிய காரணம் மீனா பணியாற்றிய தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 பேர் தான் (இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்).
அவர்கள்தான் எங்கள் சாவுக்கு முழுக்க காரணம். எங்களை வாழ விடாமல் பிரித்தார்கள்.
எங்களை சாவில் எப்படி பிரிப்பார்கள் என்று பார்ப்போம்? அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு கடவுள் துணை இருக்கட்டும்.
என் மீது உண்மையான அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி.
இப்படிக்கு பிரியாவிடையுடன் பிரவீன் குமார் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசாரும், விருதுநகர் ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன
