Sports News
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரை இளைஞர் தேர்வு; குவியும் பாராட்டுக்கள்..!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன்.
தற்போது மதுரை தெப்பக்குளம், மருதுபாண்டியர் நகரில் வசித்து வருகிறார்.
சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார்.
இந்நிலையில், பள்ளி, கல்லூரியிலும் கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவா தமிழக அணியில் இடம்பிடித்தார்.
அதன்பின்னர், தமிழக அணியில் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சச்சின் சிவா கூறுகையில் “என் பெற்றோருக்கு பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் வீரசோழன்.
தற்போது மதுரை அனுப்பானடியில் இருக்கிறோம். தியாகராஜர் மாடல் பள்ளியிலும், சௌராஷ்டிரா பள்ளியிலும் படித்து வக்போர்ட் கல்லூரியில் டிகிரி படித்துக் கொண்டிருக்கும்போது கிரிக்கெட் மேல் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.
மாவட்ட, மாநில அளவில் விளையாடி தற்போது இந்திய அணிக்கு தலைமை தாங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார்.
மேலும் “தனிப்பட்ட முறையில் 115 ரன்கள் அவுட் ஆகாமல் விளையாடி தேசிய அளவில் சாதனை செய்தேன்.
இந்திய அளவிலான அணியில் அப்போது நான் ஒருவன்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவன்.
இந்நிலையில் தான் இந்த கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருபக்கம் இந்த பொறுப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப் போன்றவர்கள் பயிற்சி எடுப்பதிலிருந்து போட்டிகளுக்கு சென்று விட்டு வரும் வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
நார்மலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் எங்களது விளையாட்டுக்கு ஆதரவு தராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
எங்கள் விளையாட்டை உலகத் தரத்திற்கு ஒளிபரப்பு செய்யத் தொலைக்காட்சிகள் யாரும் முன்வரவில்லை. ஒரு போட்டிக்குச் செல்ல, செய்துவரும் வேலைகளை விட்டுவிட்டுச் செல்வதால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறோம்.
இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் கஷ்டப்பட்டு வருகிறோம்.
எங்களுக்கான அங்கீகாரம் என்பது இல்லாமல் இருந்துவருகிறது. நார்மல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கக்கூடிய சலுகைகளை எங்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
