Viral News
காதலிக்கு பரிசளிப்பதற்காக இரவு முழுவதும் செல்போன் ஷோரூம் பெண்கள் கக்கூஸில் ஒளிந்து கொண்டு 7 விலையுயர்ந்த செல்போன்களை திருடிய இளைஞர்..!
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக விலை உயர்ந்த போன் வாங்க வேண்டும் என்பதற்காக மொபைல் போன் ஷோரூம் கழிவறையில் இரவு முழுவதும் இருந்து 7 விலையுயர்ந்த செல்போன்களை திருடிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஜே.பி நாகா என்ற பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒரு ஷோரூமின் ஊழியர்கள் இரவு பணி முடிந்து கடையை மூடியபோது ஷோரூமின் பெண்கள் கழிவறையில் நைசாக 27 வயது இளைஞர் ஒருவர் நுழைந்து ஒளிந்து கொண்டார்.
ஷோரூம் மூடப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதன்பின் அந்த இளைஞர் கழிவறையில் இருந்து வெளியே வந்து ஷோரூமின் தரை தளத்திற்குச் சென்று, ஏழு விலையுயர்ந்த மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு மீண்டும் கழிப்பறையில் ஒளிந்து கொண்டார்.
இரவு முழுவதும் அவர் கழிப்பறையிலேயே இருந்துள்ளார்.
மறுநாள் ஷோரூம் திறக்கப்பட்டதும், ஊழியர்கள் தங்களது வேலையில் பிஸியாக இருந்துள்ளனர்.
அப்போது நைசாக கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் தான் திருடிய மொபைல் போன்களுடன் சாமர்த்தியமாக வெளியே சென்றுள்ளார்.
ஆனால் அவர் வெளியே நடந்து செல்லும் போது தற்செயலாக திருடப்பட்ட மொபைல் போன்களில் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அவருடைய திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் அந்த இடத்தில் இருந்து தப்பித்துவிட்டார்.
ஆனால் மொபைல் போன் ஷோரூமில் திருடிய மொபைல் போன்களில் ஒன்றை அந்த இளைஞர் பயன்படுத்த தொடங்கிய பின்னர், ஐஎம்இஐ எண்ணை கொண்டு காவல்துறை அந்த நபரை மிக எளிதாக பிடித்துவிட்டது.
இந்த திருட்டை செய்தவர் அப்துல் முனாஃப் என்றும், தன்னுடைய காதலிக்கு விலை உயர்ந்த மொபைல்போனை பரிசாக கொடுக்க வேண்டும் என்பதற்காக திருடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, பீகார் மாநிலம் பூர்னியா பகுதியைச் சேர்ந்த முனாஃப், பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவர் மங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்தார்.
காதலிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்க விரும்பினார்.
அதற்காக மொபைல் போன்களை திருடுவது எப்படி என்று இணையத்தில் கற்று கொண்டு மொபைல் ஷோரூமுக்குள் நுழைந்தார்.
திட்டப்படி அவர் ஜே.பி.நகர் 2-ம் கட்டத்தில் உள்ள ஷோரூமுக்கு வாடிக்கையாளரை போல் தன்னை காட்டிக்கொண்டு, பெண்கள் கழிவறையில் பதுங்கியிருந்தார்.
இரவு முழுவதும் அவர் அங்கேயே கழித்ததாக அங்கிருந்த ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது.
அந்த நபர் கழிவறையில் இருந்து வெளியே வந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்வதும் சிசிடிவி காட்சியில் தெரிய வந்தது.
திருடப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் திருடப்பட்ட 6 மொபைல் போன்களையும் மீட்டு, திருட்டு வழக்கின் கீழ் நீதிமன்ற காவலில் அந்த நபரை வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
