Tamil News
ஓட்டு போட விடுமுறையில் வீட்டுக்கு வந்த மருத்துவ கல்லூரி மாணவி கழுத்தறுத்து தற்கொலை; கதறிய பெற்றோர்..!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் பால்ராஜ், கேபிள் ஆபரேட்டர். இவருக்கு நிவேதா(22) என்ற மகளும் சபரி(17) என்ற மகனும் உள்ளனர்.
நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக நிவேதா சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று மாலை அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். நிவேதா, சபரி மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென குளியலறைக்குள் சென்ற நிவேதா கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி ஓடிச் சென்று பார்த்தபோது நிவேதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து சபரி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் ஆம்புலன்ஸ் வரவழைத்து நிவேதாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே நிவேதா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக மாணவி மேற்படிப்பு படிக்க விரும்பியதாகவும் அதற்கு பெற்றோர் குடும்பச் சூழல் காரணமாக தங்களால் இயலாது என்றதாகவும் இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
