Tamil News
காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிச் சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; கலவரமான கிராமம்..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் நேற்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலூர் தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி சிறுமி அவரது வீட்டில் அடுத்து மாயமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி மகளை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியதை அடுத்து, நாகூர் ஹனிபாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது தயார் மதினா பேகம் எச்சரித்துள்ளார்.
இருவரும் ஒன்றாக சென்றது போலீஸாருக்கு தெரிந்துவிட்டது என்றும், கட்டாயம் உங்களை பிடித்து விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் நாகூர் ஹனிபா ‘ இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம்’ என கூறி எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர்.
ஆனால், லாவகமாக நாகூர் அனிபா அதனை விழுங்காமல் துப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு பின்னர் சிறுமியின் உடல்நிலை மோசமாகியதால் எலி மருந்து விவகாரத்தை சொல்லாமலேயே ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5 நாட்களாக எலி மருந்தின் வீரியம் அதிகரித்திருந்த நிலையில் தான் சிறுமியை நாகூர் அனிபாவின் தாய் மதினா பேகம் அவரது வீட்டில் விட்டுவிட்டு ஓடி வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது தாயார் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், சிறுமி காணாமல் போன வழக்கை, போக்சோ வழக்காக மாற்றப்பட்டதாகவும், நாகூர் ஹனிபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மதினா பேகம் நண்பர், உறவினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்றும் கூறினர்.
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதி படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறுமியின் படத்தையோ, பெயரையோ வெளியிடக்கூடாது என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
